மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரான ஆசைமணி இன்று சீர்காழி நகரில் மக்களிடம் வாக்கு சேகரித்து, பரப்புரை மேற்கொண்டார்.
இதில் அமைச்சர் ஓ.எஸ். மணியன், அவருடன் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் உடன் சென்றனர். அவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ.100க்கு பெட்ரோல் நிரப்புவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டது. அதனை கட்சித் தொண்டர்கள் எடுத்துச் சென்று புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் தங்களது டூவலர்களுக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு பரப்புரைப் பேரணியில் பங்கேற்றனர்.
இது குறித்து தகவலறிந்த சிறப்பு தாசில்தார் சுவாமிநாதன் தலைமையிலான பறக்கும் படையினர், பெட்ரோல் பங்க்கிற்கு செல்வதற்கு முன்பாக, அவர்கள் வருவதை அறிந்த அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து பறக்கும் படையினர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட டோக்கன்களையும், ரூ.10,870 ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட டோக்கன்களில் சீர்காழி நகர அதிமுக செயலாளர் பக்கிரிசாமியின் பெயர் அச்சிடப்பட்டு, வரிசை எண்கள் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சியான அதிமுக, தனது தொண்டர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் மீறி விநியோகம் செய்த பெட்ரோல் டோக்கன்களை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.