நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில், பூந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாதுரை என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார்.
விடுமுறை அளிக்காததால் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற நடத்துநர் - holiday
நாகப்பட்டினம்: விடுமுறை அளிக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நடத்துநர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கு கண்ணில் ஏற்பட்ட சிறு குறைபாடு காரணமாக மருத்துவ விடுப்பு எடுத்து, சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் ஒரு வார காலம் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து, அய்யாதுரை ஒரு வாரத்திற்குப் பின்னர், இன்று மருத்துவ விடுப்பு சான்றுடன் நாகையில் உள்ள போக்குவரத்து கழக கிளை மேலாளரை சந்தித்துள்ளார். ஆனால் கிளை மேலாளர் விடுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அய்யாதுரை செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார். இதனையடுத்து சக போக்குவரத்து துறை ஊழியர்கள் கூட்டம் கூடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையடுத்து அவர் தற்கொலை முயற்சியை கைவிட்டு கீழே இறங்கிவந்தார்.