கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் ஒருசில மாவட்டங்களிலுள்ள இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், கேரம், கிரிக்கெட், ஊர் சுற்றுவது, கறி விருந்து வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போன்று நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 30 இளைஞர்கள் கூட்டமாக சேர்ந்து, வாய்க்கால் மதகுப் பகுதியில் பிரியாணி சமைத்து சாப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் அதனை காணொலியாகப் பதிவு செய்து டிக் டாக் செயலியிலும் பதிவேற்றிவுள்ளனர்.
டிக் டாக்கில் இக்காணொலி வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு இளைஞர்களைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இதனையடுத்து வில்லியநல்லூர் கிராமத்தைச் சுற்றிவளைத்த தனிப்படைக் காவல் துறையினர், கறி விருந்தில் பங்கேற்ற 10 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.