நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் சையது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 463ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் ஜனவரி 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்றுவருகிறது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகப்பட்டினத்திலிருந்து தொடங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, நாகப்பட்டினத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.
ஜகஜோதியாய் நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலம் கலை நிகழ்ச்சியுடன் தாரை தப்படைகள் முழங்க இளைஞர்கள் சந்தனக்கூடு, பல்வேறு வடிவில் வண்ண விளக்குகளால் அலங்கரித்து வந்த மினாராக்களை நடனமாடி வரவேற்றனர்.
அப்போது, ஊர்வலத்தில் வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சந்தனக்கூட்டின் மீது பூக்களைத் தூவியும் பல்வேறு வடிவில் வந்த மினாராக்களையும் கண்டு மகிழந்தனர். சந்தனக்கூடு ஊர்வலமானது நாளை அதிகாலை நான்கு மணிக்கு நாகூரை வந்தடையும்.
பின்னர், நாகூர் ஆண்டவர் சமாதியில் நடைபெறும் சந்தனம் பூசும் வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். சந்தனக்கூடு நிகழ்ச்சியையொட்டி திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : சாய்னா நோவால்... சாஹல் டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரல்