மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனம் குத்தாலம் அருகே அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தை 14ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்த ஆதீன குருமுதல்வர் நமசிவாய மூர்த்தி சுவாமிகளின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதத்தில் நமசிவாயமூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை என 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு குருபூஜை கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. பத்தாம் நாளான நேற்று, குருபூஜை விழா, மாகேஸ்வர பூஜை ஆகியன நடைபெற்றன. இதையடுத்து இரவு பட்டணப் பிரவேசம் நடத்த திராவிடர் கழகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
நவீன யுகத்தில் பட்டணப்பிரவேசம் என்ற பெயரில் மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று கூறி திருவாவடுதுறை ஆதீன நுழைவு வாயிலின் முன்பு திராவிடர் கழக மாநிலப் பொதுச்செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை தமிழ் புலிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.