கஞ்சா வேட்டை: 5 கிலோ கஞ்சா பறிமுதல்; 9 பேர் கைது மயிலாடுதுறை:சீர்காழியில் காரில் கஞ்சா கடத்திவருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சனிக்கிழமை நள்ளிரவு காவல் ஆய்வாளர் புயல். பாலச்சந்திரன், உதவி ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் போலீசார் சீர்காழி புறவழிச்சாலையில் திடீர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது சிதம்பரம் பகுதியிலிருந்து வந்த காரினை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காரை ஓட்டிவந்த கஞ்சா மொத்த வியாபாரி சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ராஜா (எ) மனோஜ் (25) என்ற நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சீர்காழி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் குறித்து அவர் அளித்த தகவலின்படி புத்தூர் வினோத்(20), சீர்காழி தம்பி.தேவேந்திரன்(24), கோவில்பத்து ராஜா(37), வைத்தீஸ்வரன்கோயில் பகுதியை சேர்ந்த ஆதிகேசவன்(21), அவினாஷ்(20) உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தமாக ரூ.12லட்சம் மதிப்புடைய 5 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு காரினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து சீர்காழி காவல்நிலையம் வருகைபுரிந்த மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா, கஞ்சாவிற்பனையில் ஈடுப்பட்ட 9பேரை கைது செய்த போலீசாரை பாராட்டியதோடு, காவல் ஆய்வாளர் புயல்.பாலசந்திரனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கூறுகையில், சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் தற்போது வரை 9 பேர் கைது செய்யப்பட்டு 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் சோதனை தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பதற்காக பிரத்தியேக வாட்ஸ்அப் எண் (9442626792) அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண் 04364 211600 என்கிற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவரின் பற்றிய விபரம் பாதுகாக்கப்படும்.
இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 56 பேர் குண்டர் காவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 60 கஞ்சா விற்பனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 72 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.8 லட்சம் மதிப்புள்ள 39 கிலோ கஞ்சா இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களின் 32 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 14 பேரின் வங்கி கணக்கு முடக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தடை செய்யப்பட்ட சாராயம் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டதாக 3,284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,420 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். அப்போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், துணை காவல் கண்காணிப்பாளர்கள் லாமேக், கணேசன், ஜெயபாலன், சுகுமார், ராஜ்குமார் காவல் ஆய்வாளர் தனிப்பிரிவு சதீஷ், புயல் பாலச்சந்திரன் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:சாலை விபத்தில் திமுக பிரமுகர்கள் 2 பேர் உயிரிழப்பு