மயிலாடுதுறை:இந்தியாவில் காலம் காலமாக வரதட்சணை வழங்கும் பழக்கவழக்கம் இருந்து கொண்டு வருகிறது. மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்குத் திருமணத்திற்காக பணம், நகை என்று வரதட்சணை கொடுப்பார்கள். ஆனால், தற்போது வரதட்சணை உச்சத்திற்கு சென்று வரதட்சணை தரவில்லை என்றால் மணப்பெண்ணை மணமகன் வீட்டார் கொடுமை செய்யும் சம்பவங்கள் எல்லாம் நடந்து கொண்டு வருகிறது.
இதனால் இளைஞர்கள் மத்தியில் வரதட்சணை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த பல இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை திருவிழந்தூர் தென்னமரச்சாலையில் வசிப்பவர், ஓய்வுபெற்ற நூலகர் ஜெயக்குமார். இவரது மகன் சம்பத் குமாருக்கும், காந்திமதி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் 9ஆம் தேதி மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமண அழைப்பிதழிலேயே, அன்பளிப்பைத் தவிர்த்து, அதனை ஏழை, எளிய மக்களுக்கு நலஉதவிகள் செய்திடுங்கள் என ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தது அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து திருமண அழைப்பிதழையும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி திருமண விழாவிற்கு அழைத்திருந்தனர். இருப்பினும், அன்பின் காரணமாக மொய் அளித்தவர்களை மறுக்க முடியாததால், திருமண மண்டபத்திலேயே 'ஏழை, எளியோர் முதியோர் நலத்திட்ட நிதி' என்ற வாசகத்துடன் உண்டியல் ஒன்றை வைத்து, மொய்ப் பணத்தை அந்த உண்டியலில் செலுத்த கேட்டுக்கொண்டனர்.