பாம்பு கடித்து இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிய கலெக்டர் மயிலாடுதுறை: நடுக்கரை மேலப்பாதி கிராமத்தை சேர்ந்த ஹரிஷ்(8) என்ற சிறுவனை கடந்த 30ஆம் தேதி பாம்பு கடித்ததாக கூறப்பட்ட நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை பலனின்றி 2ஆம் தேதி இரவு உயிரிழந்தார்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு பாம்பு கடித்ததை கண்டுபிடித்து முறையாக சிகிச்சை அளிக்காததால் அந்த சிறுவன் இறந்ததாக கூறி செவ்வாய்கிழமை மாலை மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு சிறுவனின் உடலை அமரர் ஊர்தியில் வைத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பின்னர் கோட்டாட்சியர் யுரேகா, டி.எஸ்.பி வசந்தராஜ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில் 4 மணிநேரத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் லலிதா, எஸ்.பி.நிஷா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவனின் இறப்பு குறித்து உரிய விசாரணை செய்ய மருத்துக்குழு அமைக்கப்படும் என கூறினார்.
மேலும் அவரது குடும்பத்தினரின் நிலையை கருதி தன் விருப்ப நிதியில் இருந்து 2 லட்சம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் லலிதா உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று சிறுவன் ஹரிஷின் பெற்றோரை அழைத்து மாவட்ட ஆட்சியர் லலிதா 2 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். அப்போது ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, நடுக்கரை ஊராட்சி தலைவர் பிரேம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுவன் மரணம்? உறவினர்கள் சாலை மறியல்!