மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா வழுவூர் அருகே உள்ள பண்டாரவாடை என்ற கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன். வீட்டில் சட்டவிரோதமாக கலைவாணன் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது திடீரென வெடித்து சிதறியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளாகியது.
சட்ட விரோதமாக இத்தகைய குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட கலைவாணனின் இரண்டு கைகளும், இந்த வெடிவிபத்தில் முற்றிலுமாக சேதமடைந்தன. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயங்கர சம்பத்தைத் தொடர்ந்து, கலைவாணன் நாட்டு வெடிகுண்டு தாயாரிக்க பயன்படுத்திய வீட்டை காவல்துறையினர் சீல்வைத்து தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் காவல் துறையினர் நடத்திய சோதனையில் வெடிக்காத 2 வெடிகுண்டுகள் மற்றும் குண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள், வெடி மருந்துகள் ஆகியவை வீட்டின் உட்புறம் மற்றும் கொல்லைப்புறத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தஞ்சை தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் காயத்ரி தலைமையிலான நிபுணர்கள் வெடி மருந்துகளின் மாதிரிகளை சேகரித்து அதனை மேல் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:The Kerala Story : மதமாற்றத்தால் பாதித்த 300 பெண்களுக்கு உதவி... தி கேரளா ஸ்டோரி படக்குழு திட்டம்!