நாகப்பட்டினம்:நாகை திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று (ஜன.29) நடந்தது. இதில் நாகை நகராட்சி 36 வார்டுகள், வேதாரண்யம் நகராட்சி 21 வார்டுகள், 4 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளில் போட்டியிட உள்ள 60 வேட்பாளர்களைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், "முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் படி, நாகை மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகள், நான்கு பேரூராட்சிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அனைத்து பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டம்
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் திமுகவின் வாக்கு வங்கி 25 விழுக்காடு அதிகரித்துள்ளது. நாகை நகராட்சி வளர்ச்சி பணிகளுக்காக முதலமைச்சர் 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். கீழ்வேளூர் தொகுதியில் வேளாண் கல்லூரி, வேதாரண்யம் தொகுதியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் எனப் பல புதிய திட்டங்களை நாகை மாவட்டத்திற்கு முதலமைச்சர் தந்துள்ளார்.
அமைச்சர் மெய்யநாதன் பேட்டி கீழ்வேளூர் பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டப் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து திட்டச்சேரி, தலைஞாயிறு, வேளாங்கண்ணி உள்ளிட்ட அனைத்து பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
இது மட்டுமின்றி மருத்துவக்கல்லூரி, நீலக்கொடி கடற்கரை, நாகை நம்பியார் நகரில் மீன்பிடி துறைமுகம் எனப் பின்தங்கிய நாகை மாவட்டத்தை முன்னேற்றப் பாதையில் முதலமைச்சர் கொண்டு சென்றுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு 100% வெற்றியை மக்கள் பெற்றுத் தருவார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணை: 36ஆவது கட்ட அமர்வுடன் நிறைவுபெற வாய்ப்பு