நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லசாமி கூறியதாவது, "உலகின் பல்வேறு நாடுகளில் நிலத்தடி நீரை எடுக்கத் தடை உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தேவைக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது.
ஏரிகள், குளங்களை தூர்வாரி அரசே பல்வேறு இடங்களில் கட்டடங்களைக் கட்டியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் போன்று தண்ணீர் இல்லாத நிலை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவில் வரும். முறையான திட்டமிடல் இல்லாதது குடிநீர் சிக்கலுக்கு காரணம்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் நிலத்தடி நீரையும் சேர்த்து கணக்கிட்டுள்ளனர். இது தவறான ஒன்றாகும். இதனை, தமிழ்நாடு அரசு ஏன் எதிர்க்கவில்லை? மாதாந்திர கணக்கு அடிப்படையில் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் தருவதில்லை. அவர்களது வடிகாலாகத்தான் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதை பயன்படுத்துகின்றனர்.