மயிலாடுதுறை: மணல்மேடு அருகே உள்ள தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 700-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். 23 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த ஆலையானது ஒரு டன்னுக்கு 97 கிலோ சக்கரை அரவையை உற்பத்தி செய்தது.
1993 ஆம் ஆண்டில் ரூ.25 கோடி லாபம் ஈட்டியது. இந்நிலையில், 1994ஆம் ஆண்டு ரூ. 33 கோடியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கப் பணிகளை முறையாக செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டிய நிலையில், ஒரு டன்னுக்கு 59 கிலோ மட்டுமே சர்க்கரை அரவை தந்து நஷ்டம் ஏற்பட்டது.
ஆலை புனரமைப்புக்கு ரூ.56 கோடி
இந்நிலையில் நஷ்டத்தை சந்தித்து வந்த ஆலையை மறுசீரமைப்பு செய்ய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ், 2015ஆம் ஆண்டில் ஆலை புனரமைப்பு பணிக்கு ரூ.56 கோடி நிதிஒதுக்கீடு செய்தார். ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் ஆலையை புனரமைப்பதற்கான நிதியை, தமிழ்நாடு அரசு இதுநாள் வரை வழங்கவில்லை. தொடர்ந்து, நஷ்டம் ஏற்பட்டதால் 2017ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. ஆலையில் வேலை செய்த ஊழியர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டனர்.