மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ரேணுகாதேவி திருமண மண்டபத்தில் சுருக்குவலை, இரட்டைமடிவலை, அதிவேக என்ஜின் ஆகியவற்றை முற்றிலுமாக தடை செய்வது குறித்து மாவட்ட அளவிலான மீனவ பஞ்சாயத்தார் களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கினால் போராட்டம் - தரங்கம்பாடி
மயிலாடுதுறை: சுருக்குமடி வலையை முற்றிலுமாக தடை செய்ய வலியுறுத்தி மாவட்ட அளவிலான மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட தலைமை மீனவ கிராமம் தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சின்னங்குடி, வானகிரி, வெள்ளக்கோயில் பெருமாள் பேட்டை உள்ளிட்ட 18 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் சுருக்குமடி வலை, இரட்டைமடி வலை, அதிவேக இன்ஜின்கள் ஆகிய மூன்றையும் முற்றிலுமாக தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சரை சந்திப்பதற்கு அனுமதி பெறுவதற்கு அந்தந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரை வலியுறுத்துவது, ஒன்றிய மீன்வள துறை இணை அமைச்சரை சந்தித்து சுருக்குவலையை தடை செய்ய வலியுறுத்துவது, அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடிவலைக்கு அனுமதி வழங்கினால் அனைத்து மாவட்ட மீனவ கிராமங்களை ஒருங்கிணைத்து பெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.