மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஆலய வளாகத்தில் மறைமாவட்ட முதன்மைகுரு பங்குத்தந்தை பேரருட்திரு.ஆரோக்கியதாஸ் அடிகளார் தலைமையில் கொடியுடன் பவனி நடைபெற்றது. பவனியை உதவி பங்குத்தந்தை அருட்திரு.கஸ்மீர்ராஜ் வழிநடத்தினார்.
ஆதிச்சபுரம் பங்குத்தந்தை அருட்திரு.மரியசூசை அடிகளார் புனித சவேரியார் திருஉருவக்கொடியை புனிதம் செய்தார். வாணவேடிக்கை விண்ணை அதிரச் செய்ய இன்னிசையுடன் ஆலய வளாகத்தில் கொடியேற்றப்பட்டது.
அதன் பின்னர், ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.“துணிவோடு இருங்கள் நான்தான் அஞ்சாதீர்கள்” என்ற திருவசனத்தை மையமாக வைத்து நடைபெற்ற திருப்பலியில், உலக அமைதிக்காகவும், கரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திடவும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன.