நாகப்பட்டினம்: தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வானவன் மகாதேவி மீனவர் காலனியைச் சேர்ந்த நாகப்பன் என்பவருக்குச் சொந்தமான படகில் சுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி, ராஜகோபால், மகாலிங்கம் ஆகிய ஐந்து மீனவர்களும், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று உள்ளனர்.
அதேபோல், மாரியப்பன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் செல்வம், முருகானந்தம், சுப்பிரமணியன், சண்முகவேல் ஆகிய நான்கு மீனவர்களும் புறப்பட்டு, கோடியக்கரையின் தென்கிழக்கில் உள்ள கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது, இலங்கையைச் சேர்ந்த படகில் வந்த தமிழ் பேசிய நான்கு நபர்கள், தான் வைத்திருந்த புகையிலைப் பொருட்களை கொடுத்து படகில் ஏறி மீனவர்களை நிர்வாணப்படுத்தி கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் தாக்கி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், மற்றொரு படகில் வேறு ஒரு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் படகில் ஏறி கூர்மையான ஆயுதங்களால் தாக்கி சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலை, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, வாக்கி டாக்கி, மொபைல் போன், ஷீலா மீன், வெள்ளிச் செயின், அரஞ்சான் கயிறு உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.