நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அவசர நேரங்களில் பெண்கள், முதியோர் ஆகியோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழ்நாடு காவல் துறை 'காவலன் SOS' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
'காவலன் SOS' பயன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விளம்பரப் பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்படுகின்றன. அதனோடு, இச்செயலியை தரவிறக்கம் செய்வதன்மூலம், ஆபத்தில் இருக்கும் பெண்ணிற்கு அடுத்த சில நிமிடங்களிலேயே காவல் துறையின் பாதுகாப்பு கிடைத்துவிடும். முக்கியமாகத் தனியாகப் பயணிக்கும் அனைத்துப் பெண்களுமே காவலன் செயலியை தரவிறக்கம்செய்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது எனக் காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆபத்து காலங்களில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் அதிலிருந்து மீண்டுவர, காவலன் செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.