நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே நாகங்குடியைச் சேர்ந்தவர் மலர்க்கொடி(58). அண்மையில் மாரடைப்பு காரணமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், கரோனா பரிசோதனை செய்யப்பட்டு மாதிரிகள் திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டன.
கரோனா டெஸ்ட் ரிசல்ட் வரும் முன்பே மலர்க்கொடி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், மலர்க்கொடியின் மகன் சுகுமார், தாயின் உடலை பெற முயன்றார். ஆனால், கரோனா முடிவு வர தாமதமானதால் மருத்துவமனை நிர்வாகம் மலர்க்கொடியின் உடலை தர மறுத்துள்ளனர். மேலும், இறந்து 24 மணிநேரத்திற்குள் அடக்கம் செய்ய வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, மலர்க்கொடியின் உடலை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை போன்று சுகாதாரத் துறையினர் தகனம் செய்துள்ளனர். இறந்தவரின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வமாக அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது.