நாகை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற இரட்டை கொலை, கொள்ளை சம்பவத்தில், குற்றவாளிகள் பணத்தாசையில் ஈடுபட்டதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, "கொள்ளையில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் தன்ராஜ் சௌத்ரியிடம் தங்க நகை வியாபாரம் செய்யும் கங்கர்ராம் என்பவரிடம் மணீஸ் என்பவர் பணியாற்றி வந்தார். அவர், சங்கர்ராமுடன் தன்ராஜ் சௌத்ரியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
தன்ராஜ் சௌத்ரியின் வீட்டில் அதிக அளவில் பணம், தங்க நகைகள் இருப்பதை அறிந்துகொண்ட மணீஷ் குறுகிய காலத்தில் முன்னேறவேண்டும் என்ற ஆசையில், கும்பகோணம் பகுதியில் வசித்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த தனது நண்பர்களான ரமேஷ் பட்டேல், மகிபால் சிங், கருணாராம் ஆகிய மூவருடன் ஜனவரி 16ஆம் தேதி முதல் திட்டம் தீட்டியுள்ளனர். அதைத்தொடர்ந்து கருணாராம் மற்ற மூவரையும் தனது காரில் அழைத்துக் கொண்டு தன்ராஜ் சௌத்ரியின் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு வீட்டின் வெளியே காத்திருந்தார்.
வீட்டின் உள்ள நுழைந்த நபர்கள் தன்ராஜ் சௌத்ரியின் மனைவி, மகனை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு போலி துப்பாக்கியைக் காட்டி வீட்டில் இருந்த 12 கிலோ தங்க நகை, ஆறரை லட்சம் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது, உள்ளே அலறல் சத்தம் கேட்க மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தின் கருணாராம் காரை எடுத்துக்கொண்டு கும்பகோணத்திற்கு தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து மற்ற மூவரும் தன்ராஜ் சௌத்ரியின் காரை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர்.