காரைக்கால்:உலகப் புகழ்பெற்ற காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் ஸ்ரீதர்பாரன்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சனி பகவானுக்கு என தனி சன்னதி இருப்பதாலும், ஸ்ரீசனீஸ்வரர் அனுகிரக மூர்த்தியாகவும் அருள்பாலிப்பதால் சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இதற்கிடையில், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனி பெயர்ச்சியானது நேற்று வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
அதில் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாலை 5.20 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். முன்னதாக சனி பெயர்ச்சியை முன்னிட்டு அனுக்கிரக மூர்த்தி ஸ்ரீ சனிபகவானுக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. அபிஷேகத்தை தொடர்ந்து ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு தங்கக் கவசம் அணிவித்து மகாதீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, ஸ்ரீசனீஸ்வரர் வாக்கிய பஞ்சாங்கப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு நடைபெற்றபோது, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, வசந்தகால் மண்டபத்தில் தங்கக்கவச அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர் ஶ்ரீசனீஸ்வரருக்கும், தங்க காக வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் ஸ்ரீசனி பகவானுக்கும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி தலைமைச் செயலாளர் ராஜு வர்மா, தருமபுரம் ஆதீனம் மடாதிபதி 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மனிஷ், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.