மயிலாடுதுறை: டெல்டா மாவட்டங்களில் காவிரிகடைமடைப்பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதானத்தொழிலாக இருந்து வருகிறது. மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய 4 தாலுகா பகுதிகளில் சம்பா, தாளடி பருவத்தில் நெல் சாகுபடி முழுமையாக செய்யப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 82ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1 லட்சத்து 68ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி நடவுப் பணிகள் முடிந்துள்ளன.
அக்டோபர் மாதத்தில் விதைவிட்ட பயிர்கள் தற்போது நடவுசெய்து 10 நாட்கள்கூட ஆகாத நிலையில், வடகிழக்குப்பருவமழை தொடங்கி கடந்த மூன்று தினங்களாகப்பெய்த கனமழையால் மாவட்டத்தில் 37 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட இளம் சம்பா, தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக வேளாண்மைத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆறு வாய்க்கால்களில் ஏற்பட்ட உடைப்பு மற்றும் வடிகால் வாய்கால்கள் முழுமையாக தூர்வாரப்படாததால் தண்ணீர்வடிவதற்கு வழியின்றி பயிர்கள் அழுகத்தொடங்கியுள்ளன. ஏக்கருக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவு செய்து, சாகுபடி செய்த நிலையில் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக கனமழையால் சீர்காழியில் 18ஆயிரம் ஏக்கரும் கொள்ளிடத்தில் 17ஆயிரம் ஏக்கரும் தண்ணீரில் மூழ்கி விவசாயிகளை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. அரசு விவசாயிகள் மீள்வதற்குத்தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் எனவும்; விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொட்டித்தீர்த்த கனமழை; 37 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின - விவசாயிகள் வேதனை இதையும் படிங்க:கனமழையால் வெள்ளப்பெருக்கு: மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை