மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் சகாயம் அரசியல் பேரவை சார்பில் மோதிரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சே. ராஜ்குமாரை ஆதரித்து விருப்ப ஓய்வுபெற்ற சகாயம் ஐஏஎஸ் மயிலாடுதுறை கடைவீதிப் பகுதியில் நடந்து சென்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "நம்முடைய கை கரைபடிந்த கையாக உள்ளது. நீங்கள் கேட்கலாம் எந்தத் தவறும் செய்யாமல் எங்கள் கைகள் எப்படி கரையானது என்று, நண்பர்களே தொடர்ந்து ஊழல்வாதிகளுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்ததால் அவர்களுக்கு வாக்களித்த நமது கரங்கள் கரைபடிந்துவிட்டன.
நமது இளைஞர் ராஜ்குமாரைத் தேர்ந்தெடுத்தால் அந்தக் கரைகளைத் துடைத்துவிடுவார். காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், பதக்சிங், பெரியார், காமராசர், கக்கன் போன்றோரை நாம் பார்க்கவில்லை, நமது இளைஞர் ராஜ்குமாருக்கு வாக்களித்து காமராசர் போன்றோருக்கு நன்றி செலுத்துவோம்.
பரப்புரையில் பேசும் சகாயம் மயிலாடுதுறை பாதாள சாக்கடைத் திட்டத்தைச் சீரமைக்க, புதிய மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் அமைத்திட, அரசு தலைமை மருத்துவமனை மேம்படுத்திட, மயிலாடுதுறை தலைநகரம் வளர்ச்சிப் பெற்றிட நமது இளைஞர் ராஜ்குமாருக்கு மோதிரம் சின்னத்தில் வாக்களியுங்கள்" என்றார்.
இதையும் படிங்க:சென்னையின் மையப்பகுதியைக் கைப்பற்றப்போவது யார்?