மயிலாடுதுறை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் இன்று (அக்.19) உலகமெங்கும் வெளியாகி, பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று வரும் படம் 'லியோ'. முன்னதாக இப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப் படக்குழு அனுமதி கோரியதை அடுத்து, காலை 9 மணிக்குச் சிறப்புக் காட்சி திரையிட அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும் 'லியோ' படத்திற்கான சிறப்புக் காட்சி திரையிடுவது குறித்து பல்வேறு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தரப்பில் 'லியோ' படத்தின் சிறப்புக் காட்சிகள் 19 முதல் 24 ஆம் தேதி வரை மட்டும், நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் தகுந்த பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டும் என்றும், முறையான போக்குவரத்து மற்றும் பார்கிங் வசதிகளுக்கான ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் விதிமீறல்கள் ஏதேனும் கண்டால் புகார் அளிக்கத் தொலைப்பேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள பிரதான திரையரங்குகளான விஜயா மற்றும் ரத்னா ஆகிய இரண்டு திரையரங்குகளிலும் 'லியோ' படம் திரையிடப்பட்டது. அந்த வகையில் ரத்னா திரையரங்கில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த ஆராவாரத்துடன் படம் பார்க்கச் சென்றனர்.