நாகப்பட்டினத்தில் நலம் பாரம்பரியம் விவசாய அறக்கட்டளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், ”விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கான விலையை கிலோவுக்கு 30 ரூபாயாக அரசு உயர்த்தி தர வேண்டும். இயற்கை முறையில் விளைவித்த தானியங்களை அரசே உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்து, அவற்றை கூட்டுறவு அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கிட வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு பாரம்பரிய அரிசி, சிறு தானியங்கள் உணவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் அம்மா உணவகங்கள் மூலமாகவும் மரபு உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தமிழர்களின் மரபு விளையாட்டுகளை உடற்பயிற்சி ஆசிரியர் மூலம் பள்ளிகளில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை நம் நாட்டிலுள்ள மூலிகை செடிகள் குறித்து எதிர்கால சந்ததிகள் அறிந்து கொள்ள ஏதுவாக பாடப் புத்தகங்களில் மூலிகைகள், அதன் பயன்கள் குறித்து பாடம் இடம் பெற வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். தொடர்ந்து இந்தக் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நாகையில் புதிய மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்