நாகப்பட்டினம்:மயிலாடுதுறை சீர்காழி தாலுக்கா காரைமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(29) கூலி தொழிலாளி. திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. தலைப் பிரசவம் என்பதால் இவரது மனைவி பிரனீபாவை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், மயிலாடுதுறை அரசு மருத்துவனைக்கு கடந்த 9ஆம் தேதி காலை பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளார். குழந்தை நல்ல நிலையில் உள்ளதாகவும் இரு தினங்களுக்குள் சுகபிரசவம் ஆகும் என்று மருத்துவர்கள் கூறி அனுமதித்துள்ளனர். 10ஆம் தேதி அன்று மாலை வரை நன்றாக இருந்தவருக்கு, மாலையில் திடீர் தலைவலி ஏற்பட்டுள்ளது.
அங்கு இருந்த செவிலியர்கள் பாராசிட்டமல் மாத்திரை சாப்பிடும்படி கூறியதாகவும், பணியில் இருந்த மருத்துவர் நந்தினி பரிசோதனை செய்துவிட்டு பிரஷர் அதிகமாக உள்ளதாகவும், குழந்தை திரும்பியுள்ளதால் தாய்க்கு ஆபத்து எனவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி அறுவைசிகிச்சை செய்ததாக தெரிகிறது.
ஆனால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை இறப்பிற்கு பயிற்சி செவிலியர்களின் அலட்சியமே காரணம் என்றும், குழந்தை இறப்பிற்கு மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இறந்த பச்சிளம் ஆண் குழந்தையை தூக்கிகொண்டு மயிலாடுதுறை கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி, அரசு தலைமை மருத்துவர் ராஜசேகர், டி.எஸ்.பி வசந்தராஜ் மற்றும் காவல் துறையினர் பேச்சவார்த்தை நடத்தினர். நாகையிலிருந்து மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க:தண்ணீர் தண்ணீர்... பொதுமக்கள் கண்ணீர்...