மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவரான பிரியா பெரியசாமி, தன்னை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் ஆகியோர், சாதி ரீதியாக பாகுபாடு காட்டுவதோடு, ரோலிங் சேர் வாங்கியதை சாதி ரீதியில் விமர்சித்தும், வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடும் தொகைக்கு கமிஷன் கேட்பதாகவும் குற்றஞ்சாட்டி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கட்கிழமை(ஆக.12) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, மயிலாடுதுறை காவல்துறையினர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அமலா, அவரது கணவர் ராஜகோபால் ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிர்வினையாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமலா ராஜகோபால், தனது டிஜிட்டல் கையெழுத்தை ஊராட்சி மன்ற தலைவர் பிரியா முறைகேடாகப் பயன்படுத்தி செலவு செய்ததாகவும், அதனை மறைப்பதற்காகவே சாதி பாகுபாட்டை காரணம் காட்டுவதாகவும், மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் அலுவலகத்தில் புகாரளித்தார்.