மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா, தில்லையாடி பெரியமேட்டுப்பாளையம் தெருவை சேர்ந்த உத்திராபதி மகள் புஷ்பாதேவி(28). பூம்புகார் சாயவனம் தெற்குவீதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் கார்த்தி(31). சிற்பி வேலை செய்து வரும் இவருக்கும் புஷ்பாதெவிக்கும் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
வரதட்சணை கொடுமையால் கர்பினி பெண் பலி; கணவர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தல் திருமணத்திற்கு 12 பவுன் நகை போடுவதாக பெண் வீட்டார் பேசியுள்ளனர். கரோனா காலக்கட்டம் என்பதால் அந்தநேரத்தில் முடியாததால் 9 பவுன்நகை, இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் பணம், தேக்குமரத்தாலான கட்டில், பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் புஷ்பாதேவிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், மீதி நகையை கேட்டு தொடர்ந்து வீட்டில் பிரச்சினை நடந்துள்ளது. 6 மாதம் கர்ப்பிணியாக உள்ள புஷ்பாதேவி நேற்று மாலை வீட்டின் பின்புறம் கொட்டகையில் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் பெற்றோருக்கு கார்த்தி குடும்பத்தினர் தகவல் அளித்துள்ளனர்.
பெண்ணின் தந்தை உத்திராபதி மற்றும் உறவினர்கள் அலறியடித்து சென்று பார்த்தபோது புஷ்பாதேவி கழுத்தில்காயங்கள் இருந்ததாகவும், மகளை திருமணம் செய்ததிலிருந்து மீதி நகையை கேட்டு அவரது மாமியார் அகிலா, நாத்தனார் கவிதா, கணவன் கார்த்தி உள்ளிட்ட குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தங்கள் மகளிடம் செல்போனில் பேசக்கூட அனுமதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
6 மாதம் கர்ப்பிணியாக உள்ள தங்கள் மகள் புஷ்பாதேவி தற்கொலை செய்து கொள்ளவில்லை, அடித்து கொன்று தூக்கு மாட்டிவிட்டனர் என்றும். மகளின் இறப்பில் மர்மம் உள்ளதாகவும் நடவடிக்கை எடுக்ககோரி பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்து புஷ்பா தேவியின் உடலை மீட்ட போலீசார் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி 7 மாதமே ஆவதால் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ.யுரேகா தனிவிசாரணை மேற்கொண்டுள்ளார். தனது மகளின் கணவர் குடும்பத்தாரை கைது செய்தால்தான் உடலை பெற்று அடக்கம் செய்வோம் என்று கூறியுள்ளனர். இறந்த பெண்ணின் தாயார் கோட்டாட்சியர் காலில் விழுந்து நடவடிக்கை எடுக்ககோரி கதறி அழுதார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சவுக்கு சங்கருக்கு எதிராக சாட்டையை சுழற்றியது உயர் நீதிமன்றக்கிளை