நாகப்பட்டினம்:தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை, தை முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையும், உழவுக்குத் தோழனாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும், உற்றார் உறவினர்களைக் கண்டு ஆசி பெறுவதற்கான காணும் பொங்கல் எனவும் மூன்று நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் புதுப் பானையில் பொங்கல் இட்டு, அதை சூரியனுக்குப் படைத்து வணங்கி, இயற்கைக்கு நன்றி தெரிவிப்பர். இதற்காக பொங்கல் நாட்களில் புது மண்பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறும். அந்த வகையில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ராதாமங்கலம், வடக்காலத்தூர், காக்கழனி உள்ளிட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கலுக்குத் தேவையான மண்பானை, அடுப்பு உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே வயல்களில் இருந்து மண் எடுத்து வந்து, அதனை பக்குவப்படுத்தி பாண்டங்களைத் தயாரித்து, காய வைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் இரவு பகலாக கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், பகல் பொழுதுகளில் வெயில் இல்லாமல் மேக மூட்டத்துடனேயே காணப்படுகிறது.
இதனால் தயாரித்த மண்பாண்டங்களைக் காய வைக்க முடியாமலும், சூளையில் வைத்து சுட முடியாமலும் உள்ளது. எனவே, தயாரித்த பச்சை மண்பாண்டங்களைக் காய வைக்க முடியாமல், வீட்டுத் திண்ணை மற்றும் அறைகளில் அடுக்கி வைத்துள்ளனர். மேலும், சூளைக்குள் மழை நீர் புகுந்துள்ளதால், காய்ந்த மண்பாண்டங்களை சூளையில் வைத்து சுட முடியாமல் தவித்து வருகின்றனர்.