மயிலாடுதுறை:ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி பகுதியைச் சேர்ந்தவர் ஏழுகண்டலு. இவரது மனைவி ஜான்சி (42) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவர், தனது சம்பளத்தை வைத்து தனது இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துவைத்துள்ளார். மேலும், தனது கணவருக்கும் செலவுக்குப் பணம் கொடுத்துவந்துள்ளார்.
இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான அவர், செப்டம்பர் 24ஆம் தேதி யாரிடமும் கூறாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். செலவுக்குப் பணம் இல்லாமல் தவித்த அவரது கணவரும், மகள்களும் சேர்ந்து ஜான்சியை காணவில்லை என மங்களகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஜான்சியின் செல்போன் எண்ணைக்கொண்டு அவர் சென்னையை நோக்கி கம்பன் விரைவு ரயிலில் செல்வதை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ரயில்வே காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக மயிலாடுதுறை வந்த கம்பன் விரைவு ரயிலில், ஜான்சியின் புகைப்படத்தை வைத்து மயிலாடுதுறை ரயில்வே காவலர்கள் அவரை மீட்டனர்.
பின்னர், அவரின் மகள்களுக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்து, ஜான்சியை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா முன்னிலையில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:தடுப்பூசி போடுங்கள் எனக் கட்டாயப்படுத்துவது தவறல்ல - மா.சு.