மயிலாடுதுறை: சீர்காழி, தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் கனிவண்ணன் (30). இவர் கேட்டரிங் படித்துவிட்டு சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி இரவு சீர்காழி உப்பனாற்று கரையில் கனிவண்ணன் தனது மோட்டார் சைக்கிள் அருகில் தலையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சீர்காழி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனிவண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறுநாள் காலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கனிவண்ணனின் உடல் அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கனிவண்ணனின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை பொறுப்பு எஸ்பி ஜவகர் சீர்காழியில் முகாமிட்டு விசாரணையை தீவிர படுத்தினர்.
இந்நிலையில் மயிலாடுதுறை தாலுகா சேத்தூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவரும், சீர்காழி ஆர்விஎஸ் நகரில் வசித்து வருபவருமான மத்திய துணை ராணுவ படை வீரர் தேவேந்திரன் (53), என்பவரிடம் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கனிவண்ணன், தேவேந்திரன் இருவருக்கும் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது.