மயிலாடுதுறை: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (50). இவர், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயிலிலுள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் பகுதி சரக கள மேலாளராக ஒரு வருடமாக பணியாற்றி வருகிறார்.
வங்கி ஊழியரை தாக்கிய இருவர்
இவர், நேற்று (ஆகஸ்ட் 13) மாலை பணியை முடித்துவிட்டு ஊருக்குச் செல்வதற்காக அலுவலக உதவியாளர் பாலாஜி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அப்போது, வங்கி அருகே நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத இருவர், செல்வகுமாரை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில், செல்வகுமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைக்கண்ட வங்கி ஊழியர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வகுமாரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.