பருத்தி செடிகளை அழித்து குழாய் பதிப்பு: விவசாயிகள் வேதனை - nagappattinam
நாகை: மயிலாடுதுறை அருகே பருத்தி செடிகளை அழித்து, கெயில் நிறுவனம் அத்துமீறி குழாய் பதித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே காலகஸ்திநாதபுரம் கிராமத்தில் கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. மாதானத்திலிருந்து மேமாத்தூர் வரை எரிவாயு குழாய்கள் அமைப்பதற்காக காலகஸ்திநாதபுரத்தில் ராட்சத குழாய்கள் இறக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ராட்சத குழாய் விவசாய நிலங்களில் பயிரிடப்படுவதற்காக நடவு செய்யப்பட்ட நாற்று, பருத்தி உள்ளிட்ட பயிர்களை அப்புறப்படுத்திவிட்டு போலீசார் துணையுடன் பணிகளை செய்து வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக இந்த குழாய்கள் பதிக்கப்பட்டு வருவதாகவும், கெயில் நிறுவனம் செய்யும் வேலைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் நேற்று விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.