மயிலாடுதுறை: சித்தர்காடு அண்ணா நகரைச் சேர்ந்தவர், முருகன். இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு குமரேசன், முத்துக்குமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். முருகன் சென்னையில் சுதை சிற்ப வேலை பார்த்து வருகிறார். நேற்று வீட்டில் ராதிகா, குமரேசன், முத்துக்குமார் ஆகியோர் இருந்த நிலையில், இவரது வீட்டின் முன்புறம் நள்ளிரவு மர்ம நபர்கள் பீர் பாட்டிலில் பெட்ரோலை அடைத்து அதில் ஒரு திரி வைத்து, கொளுத்தி வீசி உள்ளனர்.
இதில் வீட்டின் கிரில் கேட் பகுதி அருகிலுள்ள மரக் கிளைகளும் இலைகளும் தீயினால் கருகி உள்ளன. சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்த போது மர்ம நபர்கள் தப்பித்துச் சென்று விட்டனர். மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமார், காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: தாலிச் செயினை பறித்து தப்பிய திருடனை 1 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்... சமூக வலைதளத்தில் குவியும் பாராட்டு
விசாரணையில், கடந்த 5ஆம் தேதி அதே பகுதி சோழியத் தெருவைச் சேர்ந்த அஜீத் குமார்(24), தனது நண்பர் நவீன் ராஜூவுடன் குத்தாலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நவீன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் நவீன்ராஜ் தரப்பில் அவரது தாய்மாமன் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட நண்பர்கள் அஜீத் குமாரின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே, முத்துக்குமார் வீட்டில் அஜீத் குமார் உள்ளிட்ட 3 பேர் பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது. இதையடுத்து, சோழியத்தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் அஜீத் குமார்(24), நீடூரைச் சேர்ந்த பிரவீன், நீடூரைச் சேர்ந்த ராஜன் மகன் வெங்டேஷ் என்கிற ராமன்(29) ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இதில், அஜீத் குமார், வெங்கடேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள பிரவீனை மயிலாடுதுறை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
சக நண்பன் விபத்தில் உயிரிழந்த நிலையில், விபத்தினை ஏற்படுத்திய நண்பனான அஜீத் குமார், உயிரிழந்த நண்பரின் உறவினர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது பரபரப்பினை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சரக்கில் சயனைடு கலந்து தம்பியை கொன்ற அண்ணன்.. மயிலாடுதுறை வழக்கில் திடீர் திருப்பம்!