மயிலாடுதுறை:குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட காஞ்சிவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் காரைக்காலில் இருந்து ஐஸ் பெட்டியில் மீன் வாங்கி வந்து பாலையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது போலீசார் தன் மீது சாராயம் விற்றதாக பொய் வழக்கு போட்டதாகவும், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து 15 நாள் காவல் நிலையத்தில் கையொப்பமிட்ட போது ஒவ்வொரு நாளும் பணம் மற்றும் ஓசியில் மீன் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் மீன் வியாபாரி ஐயப்பன் புகார் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு இதுகுறித்து புகார் மனு அனுப்பிய நிலையில் பாலையூர் காவல் நிலையத்தில் மீண்டும் சாராயம் விற்றதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ததாகவும், தொடர்ந்து மூன்றாவது முறை என்ன வழக்கு என்றே தெரியாத முறையில் தன் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என ஐயப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.