மயிலாடுதுறை:மணக்குடியில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் பேருந்து நிலையப் பணியில் பள்ளமான பகுதியை மேடாக்க, கட்டடத்தைச் சுற்றிலும் கடலோர உப்பு மண் நிரப்பப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என கூறி பணிகளைத் தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 13.5 ஏக்கர் இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 7 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது. ஆனால் அப்போது மயிலாடுதுறை நகராட்சியில் போதிய நிதி இல்லாததால் புதிய பேருந்து நிலையத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் 2021-2022-இன் கீழ் தமிழக அரசு ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டு மயிலாடுதுறை நகரை ஒட்டி அமைந்துள்ள மணக்குடி ஊராட்சியில் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சாலை மட்டத்தைவிடத் தாழ்வான பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டடத்தை சுற்றியும், கட்டடத்தின் உட்புறத்திலும் கடற்கரை மணல் கொண்டுவந்து கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 70 சதவீதத்திற்கு மேல் உவர்ப்புத்தன்மை கொண்ட அந்த மணலால், அப்பகுதியின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பேருந்து நிலையக் கட்டடத்திலும் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் மணக்குடி பகுதி மக்கள் பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.