மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா அஞ்சார்வார்த்தலை கிராமத்திலுள்ள வேளாண் நிலப்பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் 2002, 2008ஆம் ஆண்டுகளில் இரண்டு எண்ணெய் கிணறுகளை அமைத்து எரிவாயு எடுத்தது.
இதனால் அப்பகுதியில் 40 அடியில் கிடைத்த நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக வேளாண்மை கேள்விக்குறியாகியுள்ளது.
அந்த இரண்டு பழைய எண்ணெய் கிணறுகளையும் சுத்தம் செய்வதாகக் கூறி தற்போது ஓஎன்ஜிசி நிறுவனம் மீண்டும் கிராமத்திற்குள் வந்துள்ளது. கிணறுகளைச் சுத்தம் செய்வதற்காக அங்கு ஏராளமாக ராட்சத குழாய்கள் இறக்கப்பட்டுள்ளன.
புதிய கிணறு அமைக்குமிடத்தில் கழிவுநீரைத் தேக்கிவைக்கும் குளமும் வெட்டப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது அங்கு புதிதாக ஷேல் எரிவாயு எடுக்கும் பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஓஎன்ஜிசியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதுடன் மீத்தேன், ஷேல் எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி கிடையாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இந்தப் புதிய பணிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்தக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஓஎன்ஜிசி நிறுவனத்தை அப்பகுதியிலிருந்து வெளியேற்றக்கோரி கண்டன முழக்கமிட்டனர். தொடர்ந்து, அஞ்சார்வார்த்தலை கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் பழைய எண்ணெய் கிணறுகளை சுத்தம்செய்வதாகக் கூறி சட்டத்திற்குப் புறம்பாக ஷேல் மீத்தேன் கிணறு அமைப்பதாகவும் உடனடியாகத் தடுத்து நிறுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஷேல் எரிவாயு கிணறு அமைக்கும் ஓஎன்ஜிசி நிறுவனம்: ஆட்சியரிடம் புகார்!