தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்காழி நகருக்குள் வராத அரசுப்பேருந்தை சிறைப்பிடித்த மக்கள் - Nagai district news

சீர்காழி நகருக்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக சென்ற அரசுப்பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து வைத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 5, 2023, 10:51 PM IST

சீர்காழி நகருக்குள் வராத அரசுப்பேருந்தை சிறைப்பிடித்த மக்கள்

மயிலாடுதுறை: சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதனிடையே மயிலாடுதுறை சிதம்பரம் உள்ளிட்ட தொலைதூரங்களிலிருந்து சீர்காழி வழியாக பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பெரும்பாலானவை சீர்காழி நகருக்கு வராமல் புறவழிச் சாலை வழியாக சென்று வருகிறது.

அதோடு, வெளியூர்களிலிருந்து அரசு, தனியார் பேருந்துகளில் சீர்காழி பயணிகள் பேருந்துகளில் ஏறினால் அவர்களை சீர்காழி செல்லாது என அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பேருந்தில் ஏற்ற மறுக்கின்றனர். அதோடு சீர்காழி பயணிகளை தொலைதூரப்பேருந்துகள் நிலையத்தில் இறக்கிவிட்டு, அடுத்த பேருந்தில் செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர்.

இதனால், சீர்காழி பயணிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. பலமுறை இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறையில் இருந்து சேலம் சென்ற அரசுப்பேருந்தில், மயிலாடுதுறையில் சீர்காழி பயணிகள் நான்கு பேர் ஏறியுள்ளனர்.

பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சீர்காழிக்கு பேருந்து செல்லாது என எனக்கூறி பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளை இறக்கிவிட்டுச்சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த பயணிகள் இது குறித்து தகவலை உறவினர்களுக்கு அளித்துள்ளனர். உடனடியாக, அந்தப் பேருந்து சீர்காழி புறவழிச் சாலை வழியாக சென்றபோது, பொதுமக்கள் மற்றும் இறக்கிவிடப்பட்ட பயணிகளின் உறவினர்கள் புறவழிச்சாலையில் அரசுப்பேருந்தினை சிறைப்பிடித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்தனர்.

பேருந்து சீர்காழி நகருக்கு வந்து மீண்டும் புறப்பட்டுச் சென்றது. அதேபோல புறவழிச்சாலை வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்து புறவழிச்சாலை வழியாக சென்றால் பொதுமக்கள் ஒன்று கூடி சிறை பிடிப்போம் என எச்சரித்தனர். பொதுமக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது போன்ற நிலைமையினை மாற, உரிய பணிமனை மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு சேவைத்துறை நிறுவனமான போக்குவரத்துத்துறை, மக்களுக்கு உதவிகரமாக சேவைசெய்து, அவர்களது கருத்துகளை உள்வாங்கி,அதனை செயல்படுத்தினால்தான், நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத்துறை லாபத்தில் இயங்கத்தொடங்கும்.

மேலும், ஒவ்வொரு பணிமனைகளிலும், அரசுப் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களை மக்களிடம் கடுமையாகப் பேசக்கூடாது என அறிவுறுத்தப்படவேண்டும்; குறிப்பாக, அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சகப்பயணிகளிடம் எந்தவொரு சூழலிலும் நிதானம் தவறாமல், கனிவான அணுகுமுறையினை கையாள வலியுறுத்த வேண்டும்.

அதேபோல், ஒரு நாளில் 18 மணிநேரத்திற்கு மேலாக,வாகனத்தின் வெப்பச்சூட்டில் பணி செய்யும் அரசுப்பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களில் சிறந்த முறையில் பணியாற்றும் நபர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் புத்துணர்ச்சி தரும் வகையில் வருடத்திற்கு ஒரு முறை இன்பச்சுற்றுலா அழைத்துச் சென்றால்,அவர்களும் சற்று ஆசுவாசத்துடன் நிம்மதியாகப் பணியாற்றுவார்கள் என்பது திண்ணம். இதன்மூலம் பயணிகளின் பயணமும் நன்முறையில் அமையும்

இதையும் படிங்க:"ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை" - ஜாக்டோ ஜியோ!

ABOUT THE AUTHOR

...view details