நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாக விடாது பெய்துவரும் கனமழை காரணமாக புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி உள்வாங்கி சேதமடைந்தது. இந்நிலையில் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் பிரவின் பி நாயர் ஆய்வுசெய்து அலுவலர்களிடம் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
நாகையில் கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
நாகப்பட்டினம்: கனமழையால் 30 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளரிடம் பேசிய ஆட்சியர் பிரவின் பி நாயர், "நாகையில் கனமழை நீடிப்பதால் பொதுமக்கள் வெளியில் தேவையற்ற பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும், மேலும் நாகை மாவட்டத்தில் 52 முகாம்களில் 14 ஆயிரம் பொதுமக்கள் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை பெய்த கனமழை காரணமாக 30 ஆயிரம் ஹெக்டேர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. வேளாண் துறை அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள், கனமழைக்குப் பிறகு சேத மதிப்பு முழுவதும் தெரியும்" என்றார்.