நாகப்பட்டினம்:தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைத்து மாணவர்களின் உயிர் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரின் உயிரையும் கொல்லும் உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உள்ளதாகவும், அதனை ரத்து செய்யக்கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் இன்று ( ஆகஸ்ட் 20) தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில்
மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் பேசுகையில், “அரியலூர் அனிதாவில் தொடங்கி குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகரன் வரை தொடரும் நீட் மரணத்துக்கு திமுக தலைவர் நிச்சயம் முடிவு கட்டுவார்” என பேசினார்.
முன்னதாக திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவைக்குழுத் தலைவருமான திருச்சி சிவா எம்.பி பேசியதாவது; “மாநில அரசாங்கம் வேண்டாம் என்று சொல்லும் நீட் தேர்வை திணிப்பது விடுதலை பெற்ற நாடா? எங்கள் மாநில மக்களின் தேவை என்பது எங்களுக்குத் தான் தெரியும். அதற்கு தேவையான சட்டங்களை இயற்றுகின்ற கடமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உண்டு.