நாகை மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாக கனமழை இடைவிடாமல் பெய்துவருகிறது. தொடர்ந்து கனமழை பெய்வதால் உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் சேதம் - நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள்!
நாகை: கனமழை காரணமாக உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் உள்வாங்கியதால் அச்சத்தில் சாலையையொட்டி வசிக்கும் குடியிருப்புவாசிகள் வெளியேறினர்.
இதனையடுத்து அச்சுற்றுச்சுவர் மண் மூட்டைகள் கொண்டு சீரமைக்கும் பணி நடைபெற்றுவந்தது. இதனைத் தொடர்ந்து தர்கா குளத்தின் கிழக்குத் திசையில் உள்ள மற்றொரு சுவரும் சேதமடைந்து, கீழ்கரை சாலையும் உள்வாங்கியது. மேலும் பயங்கரச் சத்தத்துடன் சாலை உள்வாங்கியதால் சாலையையொட்டி வசிக்கும் குடியிருப்பு வாசிகள், அச்சத்துடன் நேற்று நள்ளிரவு (டிச. 16) அங்கிருந்து வெளியேறினர்.
தொடர்ந்து, அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, சாலையின் இருபுறமும் மக்கள் உள்ளே வராதவாறு அடைக்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுமேற்கொண்டனர்.