கோலாகலமாக நடைபெற்ற நாகூர் தர்கா கொடியேற்ற விழா நாகப்பட்டினம்: நாகூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 10 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சாதி, மதம் பேதமின்றி பங்கேற்பார்கள்.
அதேபோல், இந்த ஆண்டு நாகூர் தர்காவின் 467வது கந்தூரி விழா, கடந்த டிசம்பர் 10ஆம் தேதி பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியோடு துவங்கியது. தொடர்ந்து, நேற்று (டிச.14) இரவு நாகூர் ஆண்டவர் தர்காவின் 5 மினாராக்களில் கொடியேற்றப்பட்டு, கந்தூரி விழா கோலாகலமாகத் தொடங்கியது.
கொடியேற்றத்திற்காக, சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட புனிதக்கொடிகள் நாகப்பட்டினம் மீரான் பள்ளிவாசல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அனைத்து முஸ்லிம் ஜமாத்தார்கள் முன்னிலையில் துவா ஓதப்பட்டு, பெரிய கண்ணாடி அலங்கார ரதத்தில் வைத்து ஊர்வலமாக நாகூர் கொண்டு வரப்பட்டது.
அந்த பெரிய கண்ணாடி அலங்கார ரதத்தை தொடர்ந்து சாம்பிராணி சட்டி ரதம், செட்டிப்பல்லக்கு, டீஸ்டா கப்பல், சின்ன ரதம், போட் மெயில் ஆகிய ரதங்கள், மீரான் பள்ளி வாசலில் இருந்து யாகூசன் பள்ளி தெரு, நுால்கடை சந்து, சாலப்பள்ளித்தெரு, வெங்காய கடைத்தெரு, பெரிய கடைவீதி, வெளிப்பாளையம், காடம்பாடி, வடக்கு பால் பண்ணைச்சேரி வழியாக நாகூர் தர்கா சென்றது.
நாகையிலிருந்து நாகூர் வரை வந்த கொடி ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர், தர்காவின் வாசலில் கொடிகள் இறக்கப்பட்டு, சாஹிப் மினாரா, மாமன்னர் ராஜராஜசோழன் கட்டிக் கொடுத்த அலங்கார வாசல் முன்பு அமைந்துள்ள பெரிய மினாரா, தலைமாட்டு மினாரா, ஓட்டு மினாரா, முதுபக் மினாரா உள்ளிட்ட 5 மினராக்களுக்கு புனிதக் கொடிகள் கொண்டு செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நாகூர் தர்காவின் பரம்பரை கலிஃபா துவா ஓதிய பின்னர், 5 மினாராக்களில் ஒரே நேரத்தில் அதிர்வேட்டுகள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்ற நிகழ்வை முன்னிட்டு, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊர்வலம் வரும் 23ஆம் தேதி இரவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, 24ஆம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து வரும் 27ஆம் தேதி கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவுப் பெறும்.
முன்னதாக, மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில், கொடியேற்ற விழாவிற்காக, நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம மக்கள் சார்பில் சீர்வரிசை எடுத்து வந்து தர்கா நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது தர்கா நிர்வாகிகள் அவர்களை வரவேற்று, அவர்களுக்காக பெரிய ஆண்டவர் சமாதியில் சிறப்பு துவா ஓதப்பட்டது.
இதையும் படிங்க:திருவண்ணாமலை மலை மீது இருக்கும் அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பரிகார பூஜை!