2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதியை யாராலும் அவ்வளவு எளிதில் மறுந்துவிட முடியாது. சுனாமி எனும் ஆழிப்பேரலை ஆடிய கோர தாண்டவத்தில், தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சுனாமியால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து, நிற்கதியின்றி தவித்தனர். தமிழ்நாட்டில் சுனாமியால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. ஆனால், அப்படி கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள், பாதுகாப்பான முறையில் உள்ளதா என்றால் "கேள்விக்குறியே" பதிலாக உள்ளது.
இடிந்து விழும் நிலையில் உள்ள வீடு நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு, வீடுகளையும், உடமைகளையும் இழந்தவர்களுக்கும், கடலோரம் வசித்த மீனவர்களுக்கும் கடற்கரை பகுதியிலிருந்து சற்று தொலைவில், அரசு மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வீடுகளை கட்டிக் கொடுத்தனர்.
அந்த வகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட மீனவ கிராம மக்களுக்கு, புதிய நம்பியார் நகரில் 2007ஆம் ஆண்டு 892 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து இதில், அனைத்து வீடுகளும் கடந்த சில ஆண்டுகளிலேயே சிதிலமடைந்து குடியிருக்கத் தகுதியற்றதாக மாறியுள்ளது. கான்கிரீட் தளம் பெயர்ந்து விழுந்து சிறு விபத்துக்களும், மழை நீர் வீட்டிற்குள் ஒழுகுவது போன்ற பிரச்னைகளையும் இங்கிருக்கும் மக்கள் தொடர்ச்சியாக சந்தித்துவருகின்றனர்.
இதன் காரணமாக பலரும் குடியிருப்பை விட்டு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. ஆனால், பல குடும்பத்தினர் பொருளாதாரச் சூழல் காரணமாக, வீடுகளைச் சரி செய்ய முடியாமலும் இங்கேயே வசித்துவருகின்றனர்.
இடிந்து விழும் நிலையில் சுனாமி குடியிருப்பு வீடுகள் ஊரடங்கு உத்தரவால், வாழ்வாதாரம் இழந்து வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் தங்கள் மீது, வீட்டின் மேற்கூரை தளம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக, அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
வீடுகள் இடிந்து விழுந்து பெரும் உயிர்ச் சேதம் ஏற்படுவதற்கு முன்னதாக, குடியிருப்பு கட்டடங்களை புனரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்கு குடியிருக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:ஆழிப்பேரலைத் தாக்கி, 15 ஆண்டுகள் கடந்தும் மேம்படாத மீனவர்களின் வாழ்நிலை!