தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு! தேர்தலையே புறக்கணிப்போம் என மாணவர்கள் எச்சரிக்கை!! - மாணவர்கள் போராட்டம்

நாகை: நாகையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்காக போராட்டம் நடத்தும், மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கல்லூரி மாணவர்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து கல்லூரிக்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டம்

By

Published : Mar 15, 2019, 4:47 PM IST

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்ய வலியுறுத்தியும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்கள் நேற்று கண்டன பேரணியில் ஈடுபட்டனர். பேரணியாக வந்த மாணவ, மாணவிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் நாகை - செல்லூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் பேச்சுவார்த்தையில் பேரணிக்கு முறைப்படி அனுமதி பெற்று, போராட்டம் நடத்துமாறு காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

மாணவர்கள் போராட்டம்


இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்களுக்கு தேர்தலை காரணம் காட்டி, காவல்துறை அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வலியுறுத்தியும் அனுமதி மறுத்த காவல்துறையை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் வலுத்து வரும் நிலையில், அனுமதி மறுப்பால் போராட்டங்களை நீர்த்து போக செய்ய முடியாது எனவும், தேர்தலை காரணம் காட்டி, மாணவர்களின் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதால் அந்தத் தேர்தலையே, தாங்கள் வாக்களிக்காமல் புறக்கணிக்க போவதாகவும் மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களும் தேர்தலை புறக்கணிக்க சமூக வலைதளங்கள் மூலம் வேண்டுகோள் விடுக்கப்போவதாகவும் கூறுகின்றனர்.

மாணவர்களின் போராட்டத்தை அடுத்து கல்லூரி முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details