சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி இன்று வரையிலும் மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரம் என அனைத்தையும் பாதித்து பல்வேறு இன்னல்களை அளித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியது. பொருளாதார முன்னெடுப்புக் காரணங்களால் அவற்றை ஒவ்வொன்றாக தற்போது தளர்த்தியும் வருகிறது.
கரோனா வைரஸ் அனைவரது வாழ்விலும் ஏதாவதொரு வழியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் மாற்றுக் கருகத்தில்லை. நாள்கள் செல்ல செல்ல கரோனா நம்மை மிக அருகில் நெருங்கி வந்து கொண்டிருப்பது தெரிகிறது. ஒருமுறை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஒருமுறை பாதிக்கப்படுவார்களா, இல்லையா என்ற ஆராய்ச்சி முடிவுகள் ஆராய்ச்சியாளர்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கிடையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், தங்களுக்கு தொற்று ஏற்பட்டதே அறியாமல் எதிர்ப்பு சக்தியால் மீண்டது வேறு கதை.
நோய் எதிர்ப்பு சக்தியால் தொற்றிலிருந்து மீண்டவர்கள், மறுமுறையும் தொற்று பாதிப்பிலிருந்து மீள்வார்களா அல்லது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் சரியான தகவல்கள் நம்மிடம் இல்லை. தற்போதைக்கு நாம் உண்ணும் தினசரி உணவுகளில் ஊட்டச்சத்துள்ள பொருள்களை அதிக அளவில் சேர்த்துக்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம். உணவுகளால் கரோனா தொற்றினை குணப்படுத்த இயலாது. இருப்பினும், தொற்றின் தாக்கத்தை குறைக்க இயலும் என்கின்றன மத்திய, மாநில அரசுகள்.
முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற பல்வேறு அறிவுரைகளை அரசு வழங்கினாலும், மக்கள் அவற்றைப் பின்பற்ற கூடிய அளவிற்கு பொருளாதாரம் கொண்டுள்ளனரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகளில் அரசு கூறியுள்ள ஊட்டச்சத்து மிக்க உணவு குறித்த விழிப்புணர்வு சென்றுள்ளதா என்பது குறித்து ஈடிவி பாரத் கள ஆய்வு மேற்கொண்டு மக்களின் கருத்துக்களைப் பதிவு செய்தது.
இது குறித்து நாகை மாவட்டத்திலுள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பெண்களிடம் பேசுகையில், அவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு குறித்த அரசின் அறிவிப்புகள் குறித்து விழிப்புணர்வு உள்ளது தெரிய வந்தது. விழிப்புணர்வை பெற்றதாலா அல்லது பிள்ளைகளைப் பெற்றதாலா எனத் தெரியவில்லை, அப்பகுதிப் பெண்களின் கேள்வி ஒவ்வொன்றும், அரசு அடித்தட்டு மக்களும் பயன்பெறும் விதத்தில் திட்டங்களை சரிவர வகுக்கிறதா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.
”ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று சொன்னால் போதுமா? அத்தகைய உணவு ஏழைகளுக்கும் கிடைக்க அரசு என்ன வழிவகை செய்துள்ளது? எங்கள் குழந்தைகள் கடந்த ஆறு மாத காலங்களுக்கு மேலாக பள்ளிக்கோ, அங்கன்வாடிகளுக்கோ செல்லவில்லை. அங்கு சென்றாலாவது அவர்களுக்கு சத்துணவு, முட்டை, கொண்டைக் கடலை, சத்து மாவு, பால் உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகள் கிடைக்கும் இப்போது அதற்கும் வழியில்லை” என்கின்றனர் ஆதங்கத்துடன்.
சில மாதங்களாக கரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து, போதிய வருவாயின்றி வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளத் தவித்து வரும் அடித்தட்டு மக்களான தங்களுக்கு, ஊட்டச்சத்து மிக்க உணவு என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது என்பது தான் அந்த மக்களின் ஒருமித்த குரலாக ஒலித்தது.
பள்ளிகள் செயல்படாத இந்தக் கடினமான கரோனா நேரத்திலும், பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுப் பொருள்களை உலர் பொருட்களாக வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பல பள்ளிகள் மாணவர்களுக்கு அவற்றை வழங்கி வருகின்றன. இருப்பினும், சில பள்ளிகளில் அந்தப் பொருள்கள் அனைத்தும் சரியான முறையில் மாணவர்களுக்கு சேரவில்லை என்ற குற்றசாட்டுகளும் எழுந்து வருகின்றன.
அரசு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கும் நேரத்தில், இது அனைவருக்கும் சாத்தியமா? என்ற கேள்வியோடு மாவட்டக் கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மருத்துவர் லியாக்கத் அலியிடம் பேசினோம். ஊட்டச்சத்து உணவுகள் குறித்து பேசத் தொடங்கிய அவர், "கரோனா காலத்தில் சைவம், அசைவம் என எந்த உணவு வகைகளாக இருந்தாலும் அதனை நன்கு வேக வைத்து உண்ண வேண்டும். வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான் ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்கும் என்பது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து.
ஏழை, எளிய மக்களும் தங்கள் வீடுகளில் வளர்க்கும் கோழி அதை சார்ந்து கிடைக்கும் முட்டை, இறைச்சி போன்றவற்றை உண்ணலாம். ஆட்டுப்பால் போன்றவை எளிதில் கிடைக்கக் கூடிய ஒன்றாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள சிறு சிறு இடங்களில் காய்கறிகளைப் பயிரிட்டு அவற்றைப் பயன்படுத்தினாலே போதும். பொருளாதார ரீதியாகவும், வீட்டில் தயாரிக்கப்படுவதால் சத்துள்ள உணவுகளாகவும் நமக்குக் கிடைக்கும். இது போன்ற உணவுகள், நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் இயல்பாகவே ஏற்படுத்தும் தன்மையுடையவை" என்றார்.