சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதி கோரி மீனவர்கள் போராட்டம் - நாகப்பட்டினம் மீனவர்கள்
நாகப்பட்டினம்: சுருக்குமடி வலைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கவில்லை என்றால் 21 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் இறங்கி தங்களது உயிரை மாய்த்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் சுருக்குமடி வலைக்கு ஆதரவான கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த நம்பியார் நகர், பூம்புகார், திருமுல்லைவாசல் பழையார், மடவாமேடு உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், சுருக்குமடி வலையால் சிறு தொழில்கள் பாதிக்கப்படுவதாகக் கூறிய குற்றச்சாட்டு குறித்து மீனவர்களிடையே கலந்து ஆலோசனை செய்தனர். மேலும் தமிழ்நாடு அரசு சுருக்குமடி வலைக்குத் தடை விதித்துள்ளது குறித்தும், சிறு தொழில் செய்யும் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் காலை 6 மணிக்கு மேல் சுருக்குவலை மீனவர்கள் கடலுக்குச் செல்வது எனவும் ஆலோசிக்கப்பட்டது.
சிறு தொழில் செய்யும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் விற்ற பிறகு, காலை 10 மணிக்கு மேல் சுருக்குமடி வலை மூலம் பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்வது எனவும், இந்த தீர்மானத்திற்கு கட்டுப்படாதவர்கள் பிடித்து வரும் மீன்களை மீனவர்களே பறிமுதல் செய்து அலுவலர்களிடம் ஒப்படைத்து விடலாம்.
ஜூலை 16ஆம் தேதிக்குள் அரசு நல்ல முடிவை அறிவிக்கவில்லை என்றால், ஜூலை 17ஆம் தேதி கடலில் இறங்கி உயிரை மாய்த்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.