தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பால் நாகை மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு! - நாகை மாவட்ட செய்திகள்

நாகை: மயிலாடுதுறையை அடுத்த குத்தாலம் வட்டம் மேலசாலையைச் சேர்ந்த 62 வயது முதியவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

Nagai First Corona death
Nagai First Corona death

By

Published : Jul 8, 2020, 9:35 AM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த குத்தாலம் வட்டம், மேலசாலையைச் சேர்ந்த 62 வயது முதியவர் கடந்த மாதம் சளி, காய்ச்சல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அதன் பின்னர் அவர் திருவாரூர் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 7) மாலை நெஞ்சுவலி வந்து முதியவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அவர் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே எடுத்துக்கொண்ட பரிசோதனை முடிவு வெளிவந்ததில், அவருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் இரவோடு இரவாக முதியவரின் வீட்டுக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நள்ளிரவில் அடக்கம் செய்தனர்.

இதையடுத்து அவரது வீட்டில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. மேலும் துக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details