மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சி பனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கதிரேசன் மனைவி ராஜேஸ்வரி (58). இவருக்கு சுமித்ராதேவி என்ற மகளும், சுமன் (28), சரவணன் (22) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். மகள் சுமித்ராதேவி 2012-ஆம் ஆண்டும், மகன் சுமன் 2014-ஆம் ஆண்டும் நடுக்கு வாதம் எனப்படும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டனர்.
தங்கள் பிள்ளைகள் இந்த நோய்க்கு ஆளானதால் மன வேதனை அடைந்த அவர்களது தந்தை கதிரேசன் நோய்வாய்ப்பட்டு 2018 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பின்பு ராஜேஸ்வரியின் குடும்ப சூழ்நிலையை அறிந்த அவரது உறவினர் சுமித்ராதேவியை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சுமனுக்கு அவரது 14 வயதில் இருந்தே நடுக்கு வாதம் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதிலிருந்து 15 ஆண்டுகளாக சுமன் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
தனது மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு பல்வேறு மருத்துவமனைக்கு சென்றும், சித்த வைத்தியங்கள் செய்து பார்த்தும் முடியாததால், தஞ்சாவூரில் உள்ள வாஞ்சிநாதன் மூளை மற்றும் நரம்பியல் மருத்துவமனையை நாடினார் ராஜேஸ்வரி. மேலும், இந்த நோயை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என்றும், அதற்கு 4 லட்சம் வரை செலவாகும் என்ற செய்தி பேரிடியாய் அமைந்தது.
இதையும் படிங்க:வைரல் பெண் டிரைவர் ஷர்மிளா பணி நீக்கம் - கனிமொழியுடன் சந்தித்த நிலையில் நடவடிக்கை
அதனைத் தொடர்ந்து மகனை காப்பாற்றுவதற்காக ராஜேஸ்வரி சுபமுகூர்த்த தினங்களில் திருமண மண்டபங்களுக்கு எச்சில் இலை எடுக்கும் வேலைக்கு சென்றும், வயல்வெளிகளில் நடவு நடுதல், களையெடுத்தல் வேலைகளுக்கு சென்றும் அதில் வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தனது குடும்பத்தை பராமரித்து வந்துள்ளார். இந்த குறைந்த வருமானத்திலேயே, மாதாமாதம் சுமனுக்கும் 5000 ரூபாய்க்கு மருந்து மாத்திரை வாங்கித் தர வேண்டியுள்ளதால் செய்வதறியாது திகைத்து நிற்கிறார் இந்த ஏழைத்தாய்.
தற்போது ராஜேஸ்வரியின் வயது முதிர்வு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மகன் சுமனுக்கு மருத்துவ செலவு செய்ய முடியாமலும், உதவி செய்ய யாரும் இல்லாமல் திக்கு திசை தெரியாமல் தவித்து வருகிறார். இதுகுறித்து, "தாய் ராஜேஸ்வரி கூறுகையில், “என் கணவர் இறந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. என்னால் முடிந்தவரை நான் என் பிள்ளையை காப்பாற்றி வந்தேன். நான் திருமண மண்டபங்களுக்கு எச்சில் இலை எடுக்கும் வேலைக்கு சென்றால் மட்டுமே என் பிள்ளைகளுக்கு என்னால் சாப்பாடு போட முடிகிறது. மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே குழம்பு வைத்து சாப்பிட கூடிய நிலை உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் 15 வருடங்களாக இந்த நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகனை அழைத்துக் கொண்டு நரம்பியல் மருத்துவமனைகளுக்குச் சென்று காண்பித்தபோது, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அதற்கு 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும், அப்படி செய்தால் மட்டுமே உங்கள் மகனை காப்பாற்ற முடியும் என கூறுகின்றனர்.
எனக்கும் வயதாகிவிட்டதால் எனக்குப் பிறகு எனது மகனை பராமரிக்க யாரும் இல்லாததால், அரசு உதவி செய்து எனது மகனுக்கு நல்ல வழி ஏற்படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை” என்று கண்ணீருடன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஏழை குடும்பத் தாயின் கண்ணீரை துடைத்து கஷ்டத்தை போக்க உதவிக் கரம் நீட்ட முன்வருமா தமிழக அரசு?
இதையும் படிங்க:மக்களுக்கு ஏற்ற வகையில் நினைவிடங்கள் மாற்றப்படும் - அமைச்சர் சாமிநாதன்