நாகப்பட்டினம்: புதுச்சேரி மற்றும் தமிழக எல்லையாக நாகை மாவட்டம் வாஞ்சூர் சோதனைச் சாவடி உள்ளது. இதில் புதுச்சேரி மதுபானங்கள் மற்றும் கள்ளச் சாராயம் கடத்தப்படுவதாகவும், எனவே அதனைத் தடுக்க காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புதுச்சேரி மதுபானங்கள் மற்றும் கள்ளச் சாராயங்களை காரைக்கால் மாவட்டம் டி.ஆர் பட்டினம் மற்றும் வாஞ்சூர் பகுதியில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, தமிழக பகுதியில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
எனவே, இவ்வாறு விற்பனை செய்து வருபவர்களை தடுக்கும் விதமாக, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில், கூடுதலாக பல்வேறு பகுதிகளில் சோதனைச் சாவடி அமைத்தும் தனிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு, அதிக அளவில் புதுச்சேரி மது ரகங்களை கடத்தி வந்து, கள்ளத்தனமாக விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாகவும், மாவட்டம் முழுவதும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் ‘ஸ்ட்ராமிங் ஆபரேசன்’ (Stroming Operation) என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டு வரும் முக்கிய நபர்களான அந்தோனிராஜ், பீமா என்கிற முரசொலிமாறன், ஜிலாக்கி என்கிற மாரியப்பன், கேடி கண்ணன் என்கிற கண்ணன், ப்ளாக்னென் என்கிற முகமது மைதீன், ஜார்லஸ் உட்பட 80 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்து 6 ஆயிரம் லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் 440 மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தடை செய்யபட்ட சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 நபர்கள், தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்கள் என மொத்தமாக 85 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், நாகை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும், 21 இடங்களில் 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள், தலைக்கவசம் இல்லாமல் சென்ற வாகன ஒட்டிகள், அதிவேகமாக இயக்கப்பட்ட வாகனங்கள், மது போதையில் வாகனங்களை ஒட்டியவர்கள் என 61 வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.
காவல்துறையினர் 6 மணி நேரம் நடத்திய சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயம் மற்றும் மது பாட்டில்களை வீட்டில் உள்ள பீரோ, வாஷிங் மெஷின், தண்ணீர் பேரல், தோட்டத்தில் பழைய பொருட்கள் இருக்கும் இடத்தில் மறைத்து வைத்து, சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர்களைக் கைது செய்ததோடு, மது பாட்டில்கள் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், சிறப்பாக ஆபரேஷன் பணியில் ஈடுபட்ட காவல் துறையினரை, காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பாரட்டினார். மேலும், இவ்வாறான குற்றச் செயல்களில் தங்களது ஊரில் யாரேனும் ஈடுபட்டால், 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தருபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் ஆணிடம் 5 சவரன் நகை பறிப்பு!