மயிலாடுதுறைமாவட்டம்தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இன்று (மே 17) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 500 பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள் 833 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகளை , நகர சாலைகளுடன் இணைக்கும் வகையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த சாலைக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
பொதுமக்கள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் இரண்டு லட்சத்து 23 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த துறையில் பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் 14 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வருட திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எங்கும் கள்ளச்சாராயம் விற்பனை நடபெறவில்லை. இந்த விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் நீதியரசர் போல் செயல்பட்டு வருகிறார் என்று கூறினார்.