மயிலாடுதுறை:அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதம் அடைந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சுமார் 40,000 ஏக்கர் விளை நிலத்தில் மழை நீர் சூழ்ந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக மழை நீரில் மூழ்கியிருந்த நெற்பயிர்கள் தற்போது முளைக்கத் தொடங்கியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதனிடம் நான்கு நாட்களாக மழைநீரில் நெற்பயிர்கள் மிதப்பதால் முளைக்கத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் நெற்பயிர்களைக் காட்டி தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.