நாகப்பட்டினம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் தொடந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. கனமழை நீடிக்கும் மாவட்டங்களில் அமைச்சர்கள் நேரில் சென்று பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும், சேதங்கள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று (நவ.15) மயிலாடுதுறை மாவட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு கிராமத்தில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெறுவதையொட்டி, மாற்றுச்சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சர் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில், மழை பாதிப்புகளைக் குறித்து ஒவ்வொரு வீடாகச் சென்று பார்வையிட்டு, பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் அமைச்சர் மெய்யநாதன் கேட்டறிந்தார்.
மேலும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி கனகராஜ், வயலில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற வரப்புகளை வெட்டி அகற்றும் பணியை கனகராஜ் மேற்கொண்ட போது, சேற்றில் சிக்கி, மூச்சு திணறி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.